Sunday, January 31, 2010

இணைத்திருப்பது எது ?

உன்னையும் என்னையும்
பிரித்தது எதுவென்று ஒரு போதும்
நான் யோசித்ததே இல்லை....
காலங்களை தாண்டி இன்னும்
நம்மை இணைத்திருப்பது எது
என்பதே என் யோசனை....

கவிதையாய் காதலை சொன்னேன்...

கவிதையாய் காதலை சொல்வதில்
ஒரு வசதி....
சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும்
பாராட்டு கிடைக்ககூடும்....

Wednesday, January 13, 2010

புரிந்தது....

கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து...
உணர்ச்சியெல்லாம் உதடு கடித்து
மறைத்து.....
படபடக்கும் கரங்களை ஒன்றுக் கொன்று
ஆதரவாய் பற்றி.....
தட்டு தடுமாறி வார்த்தைகள் தேடி .....
விழி பார்க்க முடியாமல்
என் சட்டை பொத்தான் பார்த்து....

என்னை காதலிக்கவில்லை என்று
நீ சொன்ன போது தான் தெரிந்தது...
என்னை நீ எவ்வளவு காதலிக்கிறாய்
என்று.....

சொல்லிய மறுகணம் நான் என்னவானேனோ
என பதறி நீ என் விழி பார்த்த போது
அது உறுதியும் ஆயிற்று...

Tuesday, January 12, 2010

உனக்கென ஒரு வாழ்க்கை...

உன் அம்மாவுக்காய்....
உன் கணவனுக்காய்
உன் பிள்ளைகளுக்காய்....
உன் தேசத்துக்காய்....
ஒரு வாழ்க்கை நீ வாழ்ந்து முடித்தாயிற்று .....

உனக்கென ஒரு வாழ்க்கை
நான் இல்லாமல் எப்படி
வாழ்வாய் ?

கிறிஸ்துமஸ்....

காணாமல் போன ஆடுகளை
மீட்க தேவன் பிறந்தார்......
எல்லா வீட்டிலும் இறைச்சி
மணக்கிறது......

Monday, January 11, 2010

உன் அம்மா மேல் கோபமில்லை......

நம் காதலை பிரித்த
உன் அம்மா மேல் எப்போதும்
கோபமில்லை......

நீயும் நானும் கூட
அது காதலென உணரும் முன்
நம் காதலை உணர்ந்தவள்
அவள் தானே.....

அப்போதே பேசிஇருப்பேன்......

நீண்ட பயணம் இது
நிதானமாய் பேசிக்கொள்ளலாம்
என்று மௌனமாய் இருந்தேன்.....

பயணம் பாதியில் முடியும்
என தெரிந்திருந்தால்
அப்போதே அத்தனையும்
பேசியிருப்பேன் ......

Sunday, January 10, 2010

இப்போதாவது சொல்லுங்கள்.....

உனக்கும் எனக்கும் தனித்தனியே
கல்யாணமாயிற்று.....
குழந்தைகளுமாயிற்று...
வயதுமாயிற்று.....

நீ உன் கணவனையும்
நான் என் மனைவியையும்
நேசிக்கிறோம் என்பது உறுதியுமாயிற்று...

இன்னும் உன் மேல் குறையாமல்
இருக்கும் என் காதலை
இப்போது இவர்கள்
காதல் என்று தானே
சொல்லியாக வேண்டும்.....

Saturday, January 9, 2010

மீட்டிய விரல்கள்....

மீட்டாத வீணை ஒன்று என்னிடத்தில்
மீட்டிய விரல்கள் உன்னிடத்தில்....

முற்றுப்பெற முடியாமல் இசை ஒன்று
மௌனமாய் காற்றில் அலையும்....

அரவமற்ற இரவுகளில்
விழிகளை மூடுகையில்
எனக்கும் மட்டும்
கேட்கும் இசை

உற்று கேட்டால் உனக்கும் கூட
கேட்ககூடும்......

என் மௌனம் ஒரு போதும் சம்மதமில்லை

என் மௌனம்
ஒரு போதும் சம்மதத்தின் குறியீடல்ல...

பல நேரம் அது கோபத்தின்
சில நேரம் என் கையாலாகதனத்தின்
அடையாளம் அது ....

மனசு வலிக்க அழுதிருக்க வேண்டிய
சில சமயங்களில்
நான் மௌனமாய் இருக்க நேர்ந்ததுண்டு .....

உன் தவறுகளை
என் மௌனத்தால் மன்னித்துவிட்டதாக
நினைத்து கொள்ளாதே....

மௌனம் எப்போதும் மறுதலித்தலின்
அடையாளம்....
ஒரு போதும் அது சம்மதமில்லை.....